தகராறில் வாலிபர் சுட்டுக்கொலை
சேத்துப்பட்டு அருகே நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரிய தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருகே நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரிய தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் ராணுவ வீரர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கரிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு. இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு ஜெகதீஷன், கோதண்டராமன் என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ஜெகதீஷன் (வயது 42), முன்னாள் ராணுவ வீரர். ராணுவத்தில் இருந்து வெளியே வந்து 3 வருடங்களாகிறது. இவர் லைசென்சுடன் கூடிய கை துப்பாக்கி வைத்திருந்தார். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
2-வது மகன் கோதண்டராமன் (31). திருமணம் ஆகாதவர். இவர்களுக்கு சொந்தமாக கரிப்பூர் கிராமத்தில் 7 ஏக்கர் நிலமும், அந்த நிலத்திலேயே வீடும் உள்ளது. அண்ணன், தம்பியான இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஜெகதீஷன் சரிவர விவசாய வேலை செய்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தேவகியும், அவரது இளைய மகன் கோதண்டராமனும் தேவிகாபுரத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்து உள்ளனர். சமீபத்தில் மீண்டும் அவர்கள் கரிப்பூர் கிராமத்திற்கு வந்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
இந்த நிலையில் கோதண்டராமனுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரி அவரது அண்ணனிடம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே ஜெகதீஷன் கைத்துப்பாக்கியால் கோதண்டராமனை சுட்டுள்ளார். இதில் குண்டுபாய்ந்து கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஜெகதீஷன் மற்றும் அவரது மனைவி சிவகாமி இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கோதண்டராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல போலீசார் முயன்ற போது அவரது உறவினர்கள் சாலையை மறித்து முள் கம்புகளை வெட்டி போட்டு போலீசாரிடம் உடலை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடலை போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் முன்னாள் ராணுவ வீரர் ஜெகதீஷனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலத்தை பாகப்பிரிவினை செய்து தரக்கோரி கேட்ட தகராறில் அண்ணனே தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story