ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடுமுடியில் அதிகபட்சமாக 82 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடுமுடியில் அதிகபட்சமாக 82 மில்லி மீட்டர் மழை பதிவானது.
பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயில் வாட்டி வதைத்தது. சுட்டெரித்த வெயிலின் காரணமாக வெப்பசலனம் அதிகமாக காணப்பட்டது. பகலில் அனல் காற்று வீசியதால் ஏற்பட்ட அவதி ஒருபுறம் இருந்தாலும், இரவிலும் வீடுகளில் வெப்பம் அதிகமாக இருந்ததால் நிம்மதியாக தூங்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அப்போதும் ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. ஆனால் அதன்பிறகு பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் பகலில் வழக்கம்போல் வெயில் காணப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் திடீரென மழை பொழிய தொடங்கியது. இதையடுத்து இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது.
பொதுமக்கள் அவதி
சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு அதிகாலை வரை விட்டுவிட்டு சாரல் பெய்து கொண்டே இருந்தது. நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு வ.உ.சி. பூங்காவில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் வியாபாரிகளும், காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களும் அவதி அடைந்தனர்.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் சாலையோரமாக மழைநீர் தேங்கி நின்றது. காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வரை கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நின்றது. இதேபோல் ஈரோடு மூலப்பாளையம் பகுதியிலும் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையோரமாக தேங்கி நின்றது. அங்கு துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
கொடுமுடி
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கொடுமுடியில் அதிகபட்சமாக 82 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஈரோட்டில் 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அம்மாபேட்டை - 51.6
வரட்டுப்பள்ளம் - 50
பெருந்துறை - 28
கவுந்தப்பாடி - 26.4
மொடக்குறிச்சி - 20
நம்பியூர் - 18
கோபிசெட்டிபாளையம் - 12
பவானி - 11.4
குண்டேரிப்பள்ளம் - 6.8
சென்னிமலை - 5.4
கொடிவேரி - 1
தாளவாடி - 1
----------
Related Tags :
Next Story