இலங்கை நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் இலங்கை நிவாரண நிதிக்காக பிச்சைக்காரர் ஒருவர் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் இலங்கை நிவாரண நிதிக்காக பிச்சைக்காரர் ஒருவர் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
பள்ளிகளுக்கு உதவி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் இருந்தே கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வரத்தொடங்கினர். இந்த நிலையில் வயதான முதியவர் ஒருவர் கையில் ஏராளமான ரூ.500 நோட்டுகளுடன் அங்கு வந்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பாண்டி (வயது 70) என்று தெரிவித்தார்.
மேலும் 1980-ம் ஆண்டு முதல் மும்பையில் வசித்து வந்தேன். பின்னர் கடந்த 2000-ம் ஆண்டில் தமிழகம் வந்தேன். பின்னர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிச்சையெடுத்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் எனது தேவை போக மீதமுள்ள தொகையை அரசு பள்ளிகளுக்கு கொடுத்து வந்தேன். இதுவரை 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பண உதவி செய்துள்ளேன்.
நிவாரண நிதி
தற்போது இலங்கை பிரச்சினை குறித்து நாளிதழ், தொலைக்காட்சிகள் மூலம் தெரிந்துகொண்டேன். எனவே என்னால் இயன்ற தொகையை நிவாரண நிதியாக கொடுக்க முடிவு செய்தேன். அதன்படி ஒவ்வொரு ஊரிலும் நான் பிச்சை எடுக்கும் தொகையின் ஒரு பகுதியை அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி வந்தேன்.
அதன்படி கடந்த சில வாரங்களாக திண்டுக்கல்லில் பிச்சை எடுத்தேன். அதன் மூலம் ரூ.10 ஆயிரம் கிடைத்தது. அந்த தொகையை இங்குள்ள ஒரு வங்கியில் கொடுத்து ரூ.500 நோட்டுகளாக மாற்றிக்கொண்டு கலெக்டரிடம் இலங்கை நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக வந்தேன் என்றார். பின்னர் அவரை கூட்ட அரங்குக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். அதையடுத்து கலெக்டரிடம் தான் கொண்டு வந்த தொகையை பாண்டி வழங்கினார்.
மறையாத மனிதநேயம்
தற்போதைய விலைவாசி உயர்வினால் குடும்ப செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் விழிபிதுங்கி நிற்கும் பொதுமக்களுக்கு, பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உதவ முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் மற்றவர்களிடம் பிச்சையெடுத்து தனது அன்றாட வாழ்க்கையை நகர்த்தும் ஒரு முதியவர், இலங்கை நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கியது மனிதநேயம் இன்னும் மறையவில்லை என்பதையே நமக்கு காட்டுகிறது.
Related Tags :
Next Story