மங்களூரு அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்ற காபித்தோட்ட அதிபர் கைது
மங்களூரு அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்ற காபித்தோட்ட அதிபரை போலீசார் கைது செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் குட்டு வெளிப்பட்டதால் அவர் போலீசாரிடம் சிக்கினார்.
மங்களூரு:
காபித்தோட்ட அதிபர்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கும்பலா சேத்தன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜோசப் பிரனேஷ்(வயது 54). காபித்தோட்ட அதிபர். இவருக்கும், கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஷைமா(44) என்பவருக்கும் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு ஜோசப் பிரனேசும், ஷைமாவும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஷைமா தனது கணவரை கடுமையாக திட்டினார். இதனால் கோபம் அடைந்த ஜோசப் வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ஷைமாவை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து நிலைகுலைந்த ஷைமா சம்பவ இடத்திலேயே மயங்கினார்.
காட்டிக்கொடுக்க வேண்டாம்
அதைப்பார்த்த அவரது மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அவர்களை ஜோசப் சமாதானப்படுத்தினார். மேலும் தன்னை யாரிடமும் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று மகன்களிடம் கேட்டுக் கொண்டார். அதையடுத்து ஜோசப்பும், அவரது மகன்களும் சேர்ந்து சைமாவை மீட்டு சிகிச்சைக்காக தேரளகட்டேவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்களிடம் ஷைமா விஷம் குடித்து மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்து இருந்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷைமா இறந்தார். பின்னர் இதுபற்றி உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஷைமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷைமாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ஷைமா, தலையில் பலமாக தாக்கப்பட்டதால் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதைப்பார்த்த போலீசார் மீண்டும் ஜோசப்பையும், அவரது மகன்களையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஜோசப் தனது மனைவியை உருட்டு கட்டையால் தாக்கி கொன்றதை ஒப்புக் கொண்டார். மேலும் தான் கேட்டுக் கொண்டதால்தான் நடந்த சம்பவம் குறித்து தனது மகன்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஜோசப்பை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story