கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த விவசாயி அடித்து கொலை
கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த சகோதரனை கொலை செய்த அக்காள் மற்றும் அவரது கள்ளக்காதலனை உப்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.
உப்பள்ளி:
சகோதரன் கொலை
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா அதரகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் சம்புலிங்க காமதொள்ளி(வயது 35). விவசாயியான இவரது அக்காள் பசவா. திருமணமானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பசவாவிற்கும், அதே கிராமத்தை சேர்ந்த சென்னப்பா மாரப்பகவுடா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இது சம்புலிங்கத்திற்கு தெரியவந்ததும், அவர் அக்காள் பசவாவை கண்டித்தார். இதில் பசவாவிற்கு சகோதரன் மீது கோபம் ஏற்பட்டது. இதனால் பசவா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சகோதரனை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சம்புலிங்கத்தை, பசவா மற்றும் அவரது கள்ளக்காதலன் சென்னப்பா ஆகியோர் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
அக்காள் கைது
பின்னர் உடலை வீட்டில் வைத்து, சம்புலிங்க காமதொள்ளி திடீர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறி ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அழுது புலம்பினர். இதற்கிடையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பசவாவிடம் விசாரிக்க முயற்சித்தபோது, அவர் கள்ளக்காதலுடன் தலைமறைவானார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்ததால் சகோதரனை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி பசவா கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story