தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் மகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு போலீசார் விசாரணை
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் மகளுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு போலீசார் விசாரணை
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மடம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். மேஸ்திரி. இவருடைய மனைவி வினிதா (வயது 25). இவர் நேற்று தனது 8 வயது மகளுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது நுழைவுவாயிலில் நின்ற போலீசார் வினிதா வைத்திருந்த பையில் சோதனை செய்ய கேட்டனர்.
அப்போது வினிதா பையில் இருந்து மண்எண்ணெய் வைத்திருந்த கேனை எடுத்தார். பின்னர் திடீரென மண்எண்ணெய்யை மகள் மற்றும் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் வினிதாவிடம் இருந்த கேனை பிடுங்கியதுடன் அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
கிரைய தொகை
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வினிதாவுக்கு சொந்தமான ½ ஏக்கர் நிலத்திற்கு செல்ல பாதை தேவைப்பட்டுள்ளது. இதற்காக இவர்களது நிலத்திற்கு அருகில் உள்ள ½ ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்க திட்டமிட்டு அதே பகுதியை சேர்ந்தவர்களிடம் நிலத்திற்காக ரூ.10 லட்சம் கிரைய தொகையை கொடுத்தனர்.
ஆனால் ஒரு ஆண்டாக முனிராஜ்- வினிதாவிற்கு நிலத்தை கிரையம் செய்து தரவில்லை. இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றதாக கூறினார்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் விசாரணைக்காக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story