ராங்-சைடில் வாகனம் ஓட்டிய 12 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் ராங்-சைடில் வாகனம் ஓட்டிய 12 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
மும்பையில் ராங்-சைடில் வாகனம் ஓட்டிய 12 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
12,390 வழக்குப்பதிவு
வாகன ஓட்டிகள் ராங்-சைடில் வாகனங்களை ஓட்டிச்செல்வது போக்குவரத்து பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் ராங்-சைடில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையில் ராங்-சைடில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் மும்பையில் கடந்த 2 மாதங்களில் ராங்-சைடில் வாகனம் ஓட்டிச்சென்றது தொடர்பாக 12 ஆயிரத்து 390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சாலையோரங்களில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு இருந்த 13 ஆயிரத்து 430 வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் மும்பை போலீசார் கூறியுள்ளனர்.
கட்டுமான அதிபர்கள் மீது நடவடிக்கை
மேலும் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அவரது டுவிட்டர் பக்கத்தில், "மும்பையில் கடந்த வாரம் ரூ.80 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் போதை பொருட்கள் பிடிபட்டுள்ளன. 2 மாதங்களில் ஹெல்மட் இன்றி பயணம் செய்த 4 ஆயிரத்து 214 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாந்தாகுருஸ் பகுதியில் ஒலி மாசு ஏற்படுத்திய கட்டுமான அதிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்டாப்ஹில் பகுதியில் ஒலிமாசு விதியை பின்பற்றாத கட்டுமான அதிபர்கள் மீதும் போலீசார் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்" என கூறியுள்ளார்
Related Tags :
Next Story