வன அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திடீர் முற்றுகை


வன அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 16 May 2022 11:13 PM IST (Updated: 16 May 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் வன அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி, 

கல்வராயன்மலை தாலுகா மணியார்பாளையம் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கையில் மனுக்களுடன் நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள வன நிர்ணய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது காலம் காலமாக வசித்து வரும் இடம் மற்றும் விவசாயம் செய்து வரும் நிலத்தை வனத்துறையினர் காப்பு காடாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயம் செய்துவரும் இடத்துக்கு பட்டா வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர். 

அவர்களிடம் வன அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடந்த 1-10-1977 அன்று கல்வராயன்மலைப் பகுதிக்கு நிலவரித் திட்டப்பணி மேற்கொள்ள அரசு ஆணையிட்டது. அதன்படி ஆதாரங்கள், ஆவணங்கள், அனுபோக உரிமை ஆகியவை காண்பிக்கப்பட்டு நிலவரித் திட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதில் கல்வராயன் மலை பகுதி 57,343,59 ஹெக்டேர் பரப்பளவில் 8153,78.5 ஹெக்டேர் பரப்பளவுக்கு மட்டும் பழங்குடியின விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதியுள்ள நிலப்பரப்பு அனைத்தும் காடு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கல்வராயன்மலை மலைவாழ் பழங்குடி விவசாயிகள் காலம் காலமாக அனுபவித்து உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்காமல் உள்ளது. எனவே நிலத்தை பயன்படுத்தும் நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

 காடு புறம்போக்கை காப்புக்காடாக மாற்றுவதை கைவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மலைவாழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story