சேறும், சகதியுமான சாலை
திருவாரூரில், வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. அதை தார் சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்
திருவாரூரில், விளமல்-மன்னார்குடி சாலையில் ஆர்.வி.எல். நகர பகுதிக்கு செல்லும் வழியில் வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட மருந்து கிடங்கு மற்றும் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு நாள்தோறும் பலர் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல் போன்றவற்றுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து படித்த மாணவ-மாணவிகள் பலர் வந்து செல்கின்றனர்.
மேலும், பிரதானமான இந்த சாலையில் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்துடன் கிடங்கு அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான லாரிகள் மதுபாட்டில்களை ஏற்றி வருகின்றன. மருந்து கிடங்கிற்கும் மருந்துகளை ஏற்றிக்கொண்டு லாரிகள், வேன்கள் வந்து செல்கின்றன.
சேறும், சகதியுமான சாலை
கனரக வாகனங்களின் அதிக போக்குவரத்து காரணமாக இந்த சாலை மிகவும் பழுதடைந்து பள்ளமும், படுகுழியுமாகவும் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் திருவாரூரில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் அதிகளவு சிரமப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். ஆகவே சேறும், சகதியுமாக உள்ள இந்த சாலையினை தார் சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story