மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது
மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார
வலங்கைமான்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கீழவிடையல் ஊராட்சி கருப்பூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 54). விவசாயி. இவருடைய மனைவி சிவகலா(47). இவர்களுக்கு 10, 9 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். சங்கர் தனது மனைவியிடம் அவரது பெற்றோரிடம் இருந்து நகை-பணம் வாங்கி வரச்சொல்லி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாதமாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இரும்பு கம்பியால் அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கர் மனைவி சிவகலாவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க சிவகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல் நாடகமாட சங்கர் முடிவு செய்துள்ளார். அதன்படி சிவகலாவின் உடலை தூக்கில் தொங்க விட்டுள்ளார்.
அலறல் சத்தம்
இதற்கிடையில் சங்கர் சிவகலாவை தாக்கியபோது அவரது அலறல் சத்தம் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு கேட்டுள்ளது. உடனே அவர்கள், சிவகலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிவகலாவின் பெற்றோர் வலங்கைமான் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கருணாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சுற்றி வளைத்து பிடித்தனர்
அப்போது சிவகலாவின் உடலை தூக்கில் தொங்க விட்டு வீட்டில் இருந்து தப்பிக்க முயன்ற சங்கரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து சிவகலாவின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் இரும்பு கம்பியால் மனைவியை விவசாயி அடித்துக்கொன்று உடலை தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story