தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 May 2022 6:32 PM GMT (Updated: 16 May 2022 6:32 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் தர்மராஜா கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைப்பந்து பயிற்சிக்காக வலை அமைத்து விளையாடுகின்றனர். ஆனால் அங்குள்ள சிலர் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை அங்கு வந்து கட்டி இடத்தை அசுத்தம் செய்கிறார்கள். சாணம், குப்பைகளை கொட்டி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ராஜா, அக்ராபாளையம். 

இருளில் மூழ்கும் கிராமம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா சிட்டந்தாங்கல் கிராமத்தில் 100 வீடுகளும், 4 வீதிகளும் உள்ளன. வீதிகளில் ஒரு தெரு மின்விளக்குக் கூட எரியவில்லை. கிராமம் இருளில் மூழ்கி கிடக்கிறது. கிராமத்தில் ஒரு முனையில் ஒன்றும் கடைகோடியில் ஒன்றும் விளக்கு எரிகிறது. தொடர்ந்து மழை பெய்தால் வயல்களில் உள்ள விஷ உயிரினங்கள் தெரு வீதிகளில் ஊர்ந்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்துடன் இரவில் நடமாட வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை பொருத்தி எரிய விட வேண்டும்.
-ஜெகன், சிட்டந்தாங்கல்.

 வழிகாட்டி பலகை மாற்றப்படுமா?


வேலூர் பழைய பாலாற்று (போளூர் சுப்பிரமணியம் பாலம்) பாலத்தில் இருவழி போக்குவரத்து நடந்தபோது அமைக்கப்பட்ட வழிகாட்டும் பலகை, ஒருவழி போக்குவரத்தாக மாற்றப்பட்ட பின்னரும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சித்தூர், திருப்பதிக்கு வழிகாட்டியபடி உள்ள இந்தத் தகவலை பார்த்து, இரவு நேரங்களில் சில வெளியூர் வாகனங்கள் எதிர் திசையில் பயணிக்கின்றன. விபரீதங்களை தடுக்கும் வகையில் தகவல் பலகையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜான், சாமுவேல்நகர் வேலூர்.

போக்குவரத்து நெரிசல்

பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதி நான்கு கம்பம் சந்திப்பு. இந்தப் பகுதியில் பள்ளி மாணவர்களும், பஜார் வீதிக்கு செல்வோரும் இருசக்கர வாகனங்கள், பஸ்கள், தொழிலாளர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் அந்தப் பகுதியை கடந்து செல்ல வேண்டும். காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த நெரிசலை போக்க மாற்று வழியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர ேவண்டும்.
-ம.கீர்த்திகா, பேரணாம்பட்டு.

 ஆபத்தான நிலையில் மின்விளக்கு கம்பங்கள்


வேலூர் பழைய பாலாற்றுப் பாலத்தில் 26 மற்றும் 29 எண்ணுக்குரிய மின்விளக்கு கம்பங்களின் அடி பாகம் உடைந்துள்ளன. இதனால் சரிந்த நிலையில் இருக்கும் கம்பங்கள் காற்று வீசும்போது ஆடிக்கொண்டு ஆபத்தான நிலையில் நிற்கின்றன. கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிச்சந்திரன், விருதம்பட்டு, வேலூர்.

 மரக்கிளைகளுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள்


திருப்பத்தூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி 2-ல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள மரக்கிளைகளுக்கு இடையே மின்சாரக் கம்பிகள் செல்கிறது. இதனால் மழைக் காலங்களில் தீப்பொறி ஏற்படுகிறது. ஒரு சில நேரத்தில் மின்சாரம் தடைப்படுகிறது. உடனடியாக மின்வாரியத்துறை அதிகாரிகள் மரக்கிளைகளை வெட்ட வேண்டும்.
-பாபுராஜேந்திரகுமார், திருப்பத்தூர்.

 சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்


அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலக பஸ் நிறுத்தங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. அதில் பலர் சுவரொட்டிகளை ஒட்டி அசுத்தப்படுத்துகிறார்கள். அரசுக்கு சொந்தமான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும். அதை மீறி யாரேனும் சுவரொட்டிகள் ஒட்டினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும்.
-மோகன்தாஸ், அரக்கோணம்.




Next Story