நான்குவழி பாதையில் புதிய பாலம் கட்ட கோரிக்கை
நான்குவழி பாதையில் புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கோட்டூர்
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள மீனம்பநல்லூர் கடைவீதி பகுதியில் மருதவனம் பாசன வாய்க்கால் மற்றும் கீழப்புத்தூர், மீனம்பநல்லூர், சீலத்தநல்லூர் ஆகிய கிராமங்களின் மழைநீர் வடிகால் செல்லக்கூடிய இடத்தில் சிறிய பாலம் உள்ளது. அது பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழக் கூடிய அபாய நிலையில் இருக்கிறது.
மேலும், இந்த பகுதியில் மீனம்பநல்லூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, களப்பால் ஆகிய நகரங்களுக்கு செல்லக்கூடிய 4 வழிப்பாதை அமைந்துள்ளது.
பாலம் புதிதாக கட்டப்படுமா?
இந்த சிறிய பாலத்தின் வழியாக மன்னார்குடியிலிருந்து களப்பால் வரையிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதபுரம் வரையிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடிக்கடி சென்று வருகின்றன. கோட்டூரில் இருந்து மீனம்பநல்லூர், எடையூர் சங்கேந்தி வழியாக முத்துப்பேட்டைக்கு பல்வேறு கனரக வாகனங்கள் செல்கின்றன. வாகனங்கள் அதிக அளவு வந்து செல்லக்கூடிய போக்குவரத்து மிகுந்த இடமாக மீனம்பநல்லூர் அமைந்துள்ளது.
ஆகவே, நான்கு வழி பாதை செல்லும் இடத்தில் உள்ள பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டவும், பாசனத்திற்கு தண்ணீரை தேக்கி பயன்படுத்துவதற்கு வசதியாக ரெகுலேட்டர் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story