கீழடி அருகே கொந்தகையில் அகழாய்வு: 2 குழிகளில் தோண்ட தோண்ட வெளிவரும் முதுமக்கள் தாழிகள்
கீழடி அருகே கொந்தகையில் நடக்கும் அகழாய்வில் 2 குழிகளை தோண்ட, தோண்ட முதுமக்கள் தாழிகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன.
திருப்புவனம்,
கீழடி அருகே கொந்தகையில் நடக்கும் அகழாய்வில் 2 குழிகளை தோண்ட, தோண்ட முதுமக்கள் தாழிகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன.
முதுமக்கள் தாழிகள்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அரசு சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி மட்டுமின்றி, அதன் அருேக உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் கடந்த காலங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும் 20-க்கும் மேற்பட்ட மனித முழு உருவ எலும்புக்கூடுகளும் கிடைத்தன.
இந்த முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்ததில் உள்ளே மனித மண்டை ஓடுகள், விலா எலும்புகள், சிறிய சுடுமண் கிண்ணம், இரும்பினாலான வாள், கருப்பு- சிவப்பு நிறங்களில் சிறிய சுடு மண் பானைகள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன. அவை அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
தோண்ட, தோண்ட...
இந்த நிலையில் தற்போதைய 8-ம் கட்ட அகழாய்வின்போது கொந்தகையில் முதலில் தோண்டிய ஒரு குழியில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இதுவரை வெளிவந்துள்ளன. இன்னும் முழுமையாக தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தால்தான் முதுமக்கள் தாழிகளின் உயரம், அகலம் எவ்வளவு என்பது தெரியவரும். இந்த நிலையில் முதல் குழி அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. அதிலும் தோண்ட தோண்ட முதுமக்கள் தாழிகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன. இதில் ஒரு சில முதுமக்கள் தாழிகளின் வெளிப்புறம் கருப்பு நிறத்தில் உள்ளது. 2 குழிகளையும் சேர்த்து மொத்தம் 30 முதுமக்கள் தாழிகள் வெளியே தெரியவந்துள்ளன. இதில் ஒரு சில முதுமக்கள் தாழிகள் சேதமடைந்த நிலையிலும், சில முதுமக்கள் தாழிகள் சேதமடையாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story