பெரும்பாறையில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
பெரும்பாறையில் அரசு பஸ் நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர்.
பெரும்பாறை:
வத்தலக்குண்டுவில் இருந்து சித்தரேவு, பெரும்பாறை, கே.சி.பட்டி வழியாக பன்றிமலைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. காலை 6.20 மணிக்கு வத்தலக்குண்டுவில் இருந்து புறப்படும் இந்த பஸ்சில் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் பணிக்கு செல்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் வத்தலக்குண்டுவில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அந்த பஸ் பன்றிமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பெரும்பாறை ஏணிக்கல் என்ற இடத்தில் வந்தபோது திடீரென பஸ் பழுதடைந்து நின்றுவிட்டது. இதனால் பஸ்சில் வந்த தொழிலாளர்கள், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, மலைப்பாதையில் இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக தோட்ட வேலைக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாததால் தொழிலாளர்கள் திரும்பி வரக்கூடிய சூழல் உள்ளது. எனவே மலைப்பாதையில் தரமான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story