துறையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடம்மாற்ற எதிர்ப்பு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் சாலை மறியல்


துறையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடம்மாற்ற எதிர்ப்பு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 May 2022 12:54 AM IST (Updated: 17 May 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடம்மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
ஊராட்சி மன்ற அலுவலகம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது துறையூர் ஊராட்சி. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கோரிக்கை குறித்து தெரிவிக்கையில், ‘‘துறையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கடந்த 1992-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 
தற்போது அந்த கட்டிடம் சேதமடைந்து விட்டதாகவும், புதிய கட்டிடம் கட்டுவதற்காக கீரணிப்பட்டியில் இடம் தேர்வு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வான நிலையில் தற்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தை அந்த ஊருக்கு இடம்மாற்றம் செய்ய பணிகள் நடைபெறுகிறது. துறையூர் கிராமத்தில் போதுமான இடம் உள்ள நிலையில் புதிய கட்டிடத்தை எங்களது கிராமத்திலே கட்ட வேண்டும். துறையூர் கிராமத்தில் மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். மேலும் இதனை கலெக்டரிடம் மனுவாக எழுதி கொடுக்க இருந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்ததால் அனைவரையும் மொத்தமாக கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட நபர்களை மட்டும் செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். அனைவரும் சென்று கலெக்டரை சந்தித்து மனு அளிப்போம் என கூறியபடி நின்றனர். 
இந்த நிலையில் மதியம் 1 மணி ஆன நிலையில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை முடித்துவிட்டு கலெக்டர் காரில் புறப்பட்டு சென்றார். கலெக்டர் காரில் கடந்து சென்றதை கண்ட பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். தாங்கள் மனு கொடுக்க முடியாமல் போனதே என ஆதங்கப்பட்டனர். சிலர் கொந்தளித்து கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பிறகு கலெக்டர் அலுவலகத்தின் வெளியே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது ஊராட்சி மன்ற அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், கலெக்டர் நேரில் வர வேண்டும் எனவும் கூறினர்.
பேச்சுவார்த்தை
இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஸ்ருதி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சிகள் உதவி இயக்குனர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பின் மனுவை ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் அளித்துவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story