பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி ஏற்பட்ட சம்பவம்: ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு பாதிக்கப்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்தனர்
பிரியாணி சாப்பிட்டதில் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தில் ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை:
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அறந்தாங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஓட்டலில் பிரியாணி பொட்டலம் வாங்கி சாப்பிட்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள், தர மற்ற உணவினை விற்பனை செய்த சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் மீதும், ஓட்டல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுபோன்ற தரமற்ற உணவுகளை விற்பவர்கள் மீது மிக அதிக தண்டனையும், கடைக்கு அதிகபட்ச அபராதமும் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி மனு அளித்தனர்.
282 மனுக்கள்
இதேபோல மணமேல்குடி அருகே விச்சூரை சேர்ந்த தாவீது என்பவர் மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுடன் வந்து மனு அளித்தார். அவர் தனது மனைவி ஜெபமாலை மேரி கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில் வேலை பார்த்த இடத்தில் மரணமடைந்த நிலையில், எனது வீட்டில் இறந்ததாக பொய் வழக்குப்பதிவு செய்த மணமேல்குடி போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனது மனைவியின் இறப்புக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதேபோல பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 282 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72 ஆயிரத்து 900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதாராமு வழங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story