விராலிமலையில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 26 பேர் காயம்


விராலிமலையில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 26 பேர் காயம்
x
தினத்தந்தி 17 May 2022 12:59 AM IST (Updated: 17 May 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர்.

விராலிமலை:
ஜல்லிக்கட்டு 
விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் பட்டமரத்தான் கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழாவை யொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விழா குழுவினர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதி பெற்று அதன் படி ஜல்லிக்கட்டு நேற்று அம்மன் குளத்தில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில், அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 716 காளைகளும், 206 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. 
26 பேர் காயம் 
சீறிப்பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பாய்ந்து சென்றது. காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கும், 4 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. 
கண்டு களித்தனர் 
இதில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். 
இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story