நெல்லை அருகே கல்குவாரி விபத்து: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டம்


நெல்லை அருகே கல்குவாரி விபத்து: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 2:42 AM IST (Updated: 17 May 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே நிகழ்ந்த கல்குவாரி விபத்தை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

நெல்லை:
நெல்லை அருகே நிகழ்ந்த கல்குவாரி விபத்தை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை
நெல்லை அருகே பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளான கல்குவாரிக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவுவாசல் கதவை மூடினார்கள்.
தமிழர் விடுதலை களம் தலைவர் வக்கீல் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் முத்துகுமார், மாவட்ட தலைவர் சுரேஷ், கிழக்கு மாவட்ட தலைவர் மணி, செயலாளர் மங்கள்ராஜ், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் முத்துவளவன், தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தகசபை தென்மண்டல செயலாளர் அரவிந்தராஜா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள்.
பின்னர் திடீரென்று அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் உள்ளே யாரும் செல்ல முடியாதபடி கதவை மூடினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கேயே நின்று கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.
மீட்பு பணி
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நெல்லை அருகே அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரி விபத்து நடந்தது. அங்கு மீட்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். விபத்து நடந்த கல்குவாரிக்கு அனுமதி அளித்த தீயணைப்புத்துறை மற்றும் தொடர்ந்து கண்காணிக்க தவறிய கனிமவள, சுரங்கத்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். கல்குவாரி உரிமையாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். விபத்து குறித்து நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி செயல்படும் கல்குவாரிகளை மூட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கல்குவாரிக்கு தடை
ராதாபுரம் அருகே கூடங்குளத்தை சேர்ந்த சுந்தரலிங்கம் மற்றும் ஊர் மக்கள், விவசாயிகள், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில். ‘‘ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை, உதயத்தூர், பரமேசுவரபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் விவசாயம் அழிந்து வருவதோடு, கிராம மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இந்த கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.
இதே போல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரும் மனு அளித்தனர்.

Next Story