கர்நாடக மேல்-சபையில் 7 இடங்களுக்கு தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு அடுத்த மாதம் 3-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் கொரோனா விதியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
பெங்களூரு; கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு அடுத்த மாதம் 3-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் கொரோனா விதியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று வேட்பு மனு தாக்கல்
கர்நாடக மேல்-சபையில் மொத்தம் 75 உறுப்பினர் பதவி இடங்கள் உள்ளன. இதில் 11 நியமன உறுப்பினர் பதவி இடங்களும் அடங்கும்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் மேல்-சபை உறுப்பினர்களாக உள்ள (எம்.எல்.சி.) பா.ஜனதாவை சேர்ந்த லட்சுமண் சவதி, லெகர் சிங், காங்கிரசை சேர்ந்த ராமப்பா திம்மாப்பூர், அல்லம் வீரபத்ரப்பா, வீனா அக்ஷய்யா, ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எச்.எம்.ரமேஷ்கவுடா, நாராயணசாமி ஆகிய 7 பேரின் பதவிக்காலமும் வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து, அந்த 7 உறுப்பினர் பதவிகளுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனுக்களை மேல்-சபை செயலரிடம் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய உள்ளனர். இதையொட்டி மேல்-சபை செயலர் அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா விதிகள்
மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோர் முககவசம் அணிய வேண்டும், சமூகவிலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மேல்-சபை தேர்தலின் போது அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வருகிற 27-ந் தேதி கடைசி நாளாகும்.
7 உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று தொடங்கும் நிலையிலும், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் கட்சியினர் இன்னும் வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை.
பலத்தின் அடிப்படையில்...
அதாவது மேல்-சபையில் காலியாக உள்ள 7 உறுப்பினர் பதவிகளுக்கும், எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதா 4 பேரையும், காங்கிரஸ் கட்சி 2 பேரையும், ஜனதாதளம் (எஸ்) கட்சி ஒருவரையும் வேட்பாளராக நிறுத்த முடியும். இந்த 7 பேரை தவிர மேலும் சிலர் வேட்பு மனு தாக்கல் செய்தால், மேல்-சபை தோதலில் 7 உறுப்பினர்கள் பதவிக்கும் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
அந்தந்த கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்களின் பலத்தின்படி வேட்பாளர்களை நிறுத்தினால், 7 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குவதால் இன்னும் ஓரிரு நாட்களில் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
கட்சிகளின் நிலவரம்
தற்போதைய நிலையில் மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு 37 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 26 உறுப்பினர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 10 உறுப்பினர்களும் உள்ளனர்.
பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அக்கட்சி தற்போது நடைபெறும் 7 இடங்களுக்கான தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலே தனி மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story