மதுரையில் இடி-மின்னலுடன் கனமழை


மதுரையில் இடி-மின்னலுடன் கனமழை
x
தினத்தந்தி 17 May 2022 3:23 AM IST (Updated: 17 May 2022 3:23 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது.

மதுரை
மதுரையில் நேற்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது.
இடி, மின்னலுடன் மழை
மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது. இரவிலும் அதே வெப்பசலனம் காணப்பட்டது. இதனால் மதுரை மக்கள் மழைக்காக ஏங்கி காத்திருந்தனர்.
நேற்று காலையிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தது. இந்தநிலையில், இரவு 7 மணியளவில் திடீரென பலத்த இடி-மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் அரைமணி நேரம் பெய்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. 
மரம் விழுந்தது
மதுரை ஜெய்ஹிந்துபுரம், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் மழை பெய்தது. மாலை நேரம் என்பதால், கல்லூரிகள் சென்று விட்டு வீடு திரும்பியவர்கள், வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது.
மழையின் காரணமாக, அவனியாபுரம் பகுதியில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதுகுறித்து அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.மேலும் மழையால் பெரியார் பஸ் நிலைய பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அக்னி வெயில் அதிகமாக வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று கொட்டாம்பட்டி, வலைச்சேரிபட்டி, பள்ளபட்டி, சொக்கலிங்கபுரம், பாண்டாங்குடி, கருங்காலக்குடி, அய்யாபட்டி, மங்களாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
 தற்போது பெய்த மழையால் நிலக்கடலை, பயறு வகைகள் பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story