விபத்து தொடர்பான நிதி வழங்கக்கோரி பெண் மனு
விபத்து தொடர்பான நிதி வழங்கக்கோரி பெண் மனு அளித்தார்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 320 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரிய பட்டக்காடு கிராமத்தை சேர்ந்த சுதாகரின் மனைவி மஞ்சுளா ஒரு மனு கொடுத்தார். அதில், கடந்த 23.2.21-ம் ஆண்டு மாட்டு வண்டி ஓட்டி வந்தபோது மாடு மிரண்டு விபத்து ஏற்பட்டதில் சுதாகர் படுகாயமடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 25.2.21-ம் ஆண்டு உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் விபத்து நடந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் குடும்பத்திற்கு உரிய நிதி கிடைக்காததால் தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எனவே மாவட்ட கலெக்டர், விபத்து தொடர்பான நிதி வழங்கி தனது குடும்பத்தையும், தனது 2 மகன்களின் எதிர்காலத்தையும் காக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.