தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்த பழ வியாபாரி
தெப்பக்குளத்தில் பழ வியாபாரி பிணமாக மிதந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நேற்று மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் மிதந்தது. இதனை கண்டவர்கள் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து தெப்பக்குளத்தில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் பெரம்பலூர் எடத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் அருண்குமார்(வயது 32) என்பது தெரியவந்தது. அருண்குமார் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தனது தாய் பார்வதியுடன் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்ததும், மதுகுடிக்கும் பழக்கம் உடையவரான அருண்குமார் நேற்று முன்தினம் மாலை வியாபாரம் முடித்துவிட்டு கடையில் இருந்து ரூ.500-ஐ எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்து விடுவதாக தாயிடம் கூறிவிட்டு தெப்பக்குளத்திற்கு மது குடிக்க சென்றதாகவும் கூறப்படுகிறது. அருண்குமார் இரவு வீட்டிற்கு வராததால், உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கலாம் என்று பார்வதி நினைத்துள்ளார். இந்நிலையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி அருண்குமார் உயிரிழந்திருக்கலாம் என்பது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.