பஞ்சாயத்து செய்து குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த 6 பேர் மீது வழக்கு


பஞ்சாயத்து செய்து குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 May 2022 3:36 AM IST (Updated: 17 May 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாயத்து செய்து குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை:

வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாரகுன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களை கூறி ஊர் முக்கியஸ்தர்கள் பஞ்சாயத்து செய்து, அந்த பகுதியில் வசிக்கும் கண்ணன்(வயது 52) என்பவர் குடும்பத்தையும், அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், பழனியப்பன், மணிகண்டன், சந்திரசேகர், சேகர், குணசேகர் ஆகியோர் குடும்பத்தையும் ஊர் பஞ்சாயத்துக்கு கட்டுப்படவில்லை என்று கூறி அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊரில் நடக்கும் எந்த விசேஷங்களிலும் அவர்களை கலந்து கொள்ள அழைக்காததால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் அரும்பாவூர் போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கிராமத்தில் பஞ்சாயத்து பேசி ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்துக்காரர்கள் சுரேஷ், மாரிமுத்து, முத்தையா, குமாரசாமி, சின்னசாமி, ராஜா ஆகிய 6 பேர் மீதும் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story