காவேரிப்பட்டணம் அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து-மற்றொரு மாணவன் கைது
காவேரிப்பட்டணம் அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
அரசு பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பண்ணிஅள்ளி புதூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த 14-ந் தேதி 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவர்கள் 2 பேர் இடையே மாம்பழம் சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்தது. அப்போது தகராறில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் பள்ளிக்கு வரவில்லை. இதனையடுத்து மற்றொரு மாணவன் செல்போனில் வாய்ஸ் மெசேஜ் மூலமாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து
இந்த நிலையில், நேற்று சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு மாணவனின் தோள்பட்டையில் குத்தினான். இதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அவனது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த ஆசிரியர்கள் அங்கு வந்து மாணவனை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்
கைது
இதைத்தொடர்ந்து மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளிக்கூடத்தில் மாணவனை, சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Related Tags :
Next Story