‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 May 2022 4:09 AM IST (Updated: 17 May 2022 4:09 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விபத்து ஏற்படும் அபாயம்

சேலம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சாலை நடுவே பாதாள சாக்கடையின் குழாய் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு குழி இருக்கும் இடத்தில், மரக்கட்டைகள், கற்களை தடுப்பாக வைத்துள்ளனர். இரவு நேரத்தில் இந்த வழியாக செல்ல பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாதாள சாக்கடை கால்வாய் மூடியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தசாமி, மணக்காடு, சேலம்.

====

தேங்கி நிற்கும் கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 19-வது வார்டு சூரமங்கலம் தர்மநகர் அருகே உள்ள ஜலால் தெருவில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதி சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாக இதே நிலை காணப்படுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்றிடவும், புதிய சாக்கடை கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

செந்தில், சூரமங்கலம், சேலம்.

====

அரசு பஸ்கள் நின்று செல்லுமா?

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் சரிவர நிறுத்தப்படுவது இல்லை. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இருந்து வரக்கூடிய பஸ்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தாமல் அருகில் உள்ள சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சுங்கச்சாவடியில் இறங்கி நடந்து வரும் நிலை உள்ளது. எனவே கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலமுருகன், ஓசூர்.

===

‘சிக்னல்’ அமைக்க வேண்டும்

கிருஷ்ணகிரி-திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒப்பதவாடி கூட்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இங்குள்ள பிரிவு சாலையில் விபத்துகளை தவிர்க்க சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும்.

-கிருபா, பர்கூர், கிருஷ்ணகிரி.

===

நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் எம்.பெருமாபாளையம் ஊராட்சி 6-வது வார்டு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி. செல்வம், மேட்டுப்பட்டி, சேலம்.

===

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

சேலம் உத்தமசோழபுரம் ஊராட்சி சூளைமேட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில், மழைக்காலங்களில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டி தர வேண்டும்.

ஷர்மிதா, சூளைமேடு, சேலம்.

===

சேதமடைந்த சிமெண்டு சாலை

தர்மபுரி அருகே வத்தல்மலையில் கொண்டகரஅள்ளி ஊராட்சியில் தீர்த்தகிரி கடை முதல் கொட்டலாங்காடு வரை புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு 3 மாதத்திற்குள் பூச்சுகள் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகிறது. தரமில்லாத இந்த சிமெண்டு சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா?

மாணிக்கம், கொட்டலாங்காடு, வத்தல்மலை.




Next Story