அரசு டாக்டர் பணிக்கு செல்லவிடாமல் மனைவியை வீட்டில் அடைத்து சித்ரவதை-கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
அரசு டாக்டர் பணிக்கு செல்ல விடாமல் மனைவியை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்த கணவர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சேலம்:
அரசு டாக்டர் பணிக்கு செல்ல விடாமல் மனைவியை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்த கணவர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
டாக்டர் தம்பதி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், காந்திபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் சந்தோஷ்குமரன் (வயது 27). சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் மவுலியா (26). இவரும் டாக்டர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர்களாக பணியாற்றினர்.
இந்த நிலையில் மவுலியா அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் கணவர் தன்னை அரசு பணிக்கு செல்ல விடாமல் சித்ரவதை செய்கிறார். அதற்கு அவரது நண்பர் உடந்தையாக உள்ளார். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
நேர்முக தேர்வு
டாக்டர்களான சந்தோஷ்குமரன், மவுலியா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து கொண்டே அரசு டாக்டர் பணிக்கு செல்வதற்காக படித்து வந்தனர். இந்த நிலையில் சேலம் இரும்பாலைக்கு சொந்தமான ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்ற நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டனர். இதில் மவுலியா மத்திய அரசு டாக்டர் பணிக்கு தேர்வானார். சந்தோஷ்குமரன் தேர்வாகவில்லை. இந்த நிலையில், சந்தோஷ்குமரன் தனது மனைவி மவுலியாவை அரசு டாக்டர் பணிக்கு செல்லக்கூடாது என்று கூறி வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறப்பட்டு உள்ளது. அதன்பேரில் கொலை மிரட்டல், ஜாதி பெயரை கூறி திட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சந்தோஷ்குமரன், அவரது நண்பர் கணேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.