அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அருண்பாட்சா தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சோணாசலம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் இளமாறன் கலந்துகொண்டு பேசினார்.
போராட்டத்தில் 1.1.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் மருத்துவ செலவை திரும்பப்பெற அளிக்கப்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தமிழக அரசு விரைவாக தீர்வு காண வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர், கிராமப்புற நூலகர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story