மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா இளையங்குன்னியை அடுத்த தட்டரணை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 48). இவர் சாராய வழக்கு தொடர்பாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட உடல் நல குறைவால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கமணி மரணத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில குழு உறுப்பினர் டெல்லிபாபு கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தங்கமணி மரணத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும். விசாரணைக்கு அழைத்து சென்று கொடுமைப்படுத்தி, சித்ரவதை செய்து படுகொலை செய்த திருவண்ணாமலை கலால் பிரிவு ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். தங்கமணியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.50 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும்.
வருவாய்த்துறையின் மூலம் விசாரணை செய்து மலைக்குறவன் மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழ், மறுவாழ்வு ஏற்படுத்த மாற்று தொழில் தொடங்க தேவையான நிதி உதவி வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தங்கமணியின் மனைவி, மகன்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், ரகுநாதன், செல்வம், ராமதாஸ், தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story