வேளாண் விரிவாக்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


வேளாண் விரிவாக்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 6:06 PM IST (Updated: 17 May 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி வேளாண் விரிவாக்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலசபாக்கம்

கலசபாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி வேளாண் விரிவாக்க அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

101 மில்லி மீட்டர் மழை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 101 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தன. இதனால் கலசபாக்கம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 900 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த அளவுக்கு பாதிப்படைந்த பகுதிகளை எந்த ஒரு அதிகாரிகளும் வந்து பார்வையிட வரவில்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

 முற்றுகை போராட்டம்

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இருந்ததை அறிந்த விவசாயிகள் நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனுக்களுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது விவசாயிகள் கூறுகையில், சேதம் அடைந்துள்ள விவசாய நிலத்தை இதுவரைக்கும் எந்த அதிகாரிகளும் ஏன் வந்து பார்வையிடவில்லை. சேதமடைந்த பயிர்களை பார்வையிட குழு அமைத்து விவசாயிகளிடம் முறையான மனுக்களை பெற்று நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமிநரசிம்மன், விவசாயிகளிடம் சமரசம் செய்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 

மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேளாண்துறை அதிகாரிகளிடமும் மற்றும் இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக் கூறுவதாக உறுதியளித்தார். அதன் பிறகு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story