தூத்துக்குடியில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று காலை பாளையங்கோட்டை ரோடு இசக்கியம்மன் கோவில் அருகே தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் அல்போன்ஸ் லிகோரி, சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் டெரன்ஸ் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்காவ்ட்ட தலைவர் சாம்பசிவன், தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வூதியர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் எட்டப்பன், சிவதானுதாஸ் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் நிறைவுரையாற்றினார்.
கோரிக்கைகள்
போராட்டத்தில் ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்ட குறைபாடுகளை களைய வேண்டும், கொரோனா உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று செலவுத் தொகை பெற விண்ணப்பித்து உள்ள 20 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், கிராம உதவியாளர் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பொன் பரமானந்தம், மாவட்ட பொருளாளர் திரவியம், அகில இந்திய பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநிலக்குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story