தொடர் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களை பாதுகாக்க நடவடிக்கை


தொடர் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களை பாதுகாக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 17 May 2022 8:56 PM IST (Updated: 17 May 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களை பாதுகாக்க பாலித்தீன் கவர்கள் மூலம் மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஊட்டி

தொடர் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களை பாதுகாக்க பாலித்தீன் கவர்கள் மூலம் மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

ஊட்டியில் கன மழை

வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை கனமழையாக கொட்டித்தீர்த்தது. குறிப்பாக குன்னூர், மஞ்சூர், ஊட்டி, மசினகுடி, கூடலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. ஒரேநாளில் 649 மி.மீ. மழை பதிவானது. கனமழையுடன் மேகமூட்டமான காலநிலை நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 

காய்கறி பயிர்கள் அழுகின

கனமழை காரணமாக, ஊட்டி அருகே கேத்தி பாலாடா சுற்று வட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான பீட்ரூட் பயிர்கள் நீரில் மூழ்கின. மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் அழுக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலர்கள் அழுகாமல் இருக்க தோட்டகலை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன்படி மலர்கள் மீது பாலித்தீன் கவர்கள் கொண்டு மூடப்படுகிறது. இந்தப்பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 

மலர்களை பாதுகாக்க நடவடிக்கை

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஊட்டியில் மலர் கண்காட்சி வருகிற 20-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான பல்வேறு வண்ண மலர்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த கண்காட்சியை காண மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதனால் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பெயது வரும் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்கள் அழுக வாய்ப்பு உள்ளது. அதனால் மலர்களை பாதுகாக்க பாலித்தீன் கவர்கள் மூலம் மூடப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story