அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா


அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 17 May 2022 3:46 PM GMT (Updated: 17 May 2022 3:46 PM GMT)

அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்
அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் அரைநாள் தர்ணா போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாசல் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கி பேசினார். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை 1-7-2022 முதல் புதுப்பித்து அமல்படுத்தப்படும் முன்பாக ஓய்வூதியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, அதில் உள்ள குறைபாடுகளை களைந்து, சேர்க்கப்பட வேண்டிய அம்சங்களை இணைத்து உண்மையாக இலவச மருத்துவ வசதி செய்து தர வேண்டும். 
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதிக்குள் செலவு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி 
வட்ட கிளை துணை தலைவர் குருராஜன் வரவேற்றார். மாநில உதவி பொதுச்செயலாளர் செல்வராஜ் தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் பாலசந்திரமூர்த்தி பேசினார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் மேகவர்ணன் நன்றி கூறினார். இதில் பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். திரளானவர்கள் பங்கேற்று மதியம் வரை தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Next Story