விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள்


விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள்
x
தினத்தந்தி 17 May 2022 9:29 PM IST (Updated: 17 May 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

போடிப்பட்டி, மே.18-
உடுமலை வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள் வழங்கப்படவுள்ளதாக வேளாண்மைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறப்புத் திட்டங்கள்
உடுமலை வட்டாரத்தில் கல்லாபுரம், ஆண்டிய கவுண்டனூர், ஜல்லிப்பட்டி ஆகிய ஊராட்சிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் நடப்பு ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மூலம் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 
அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-
உளுந்து விதைகள்
‘தற்போது தேர்வு செய்யப்பட்ட ஊராட்சியிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5 விசைத் தெளிப்பான்கள், 5 கைத்தெளிப்பான்கள் மானிய விலையில் வழங்கப்படவுள்ளது. அதன்படி விசைத்தெளிப்பானின் முழு விலையான ரூ.8,820-ல் மானியம் ரூ.3 ஆயிரம் கழித்து ரூ.5,820-ஐ விவசாயிகள் கட்டினால் போதும். மேலும் கைத்தெளிப்பானின் முழு விலையான ரூ.2,649-ல் மானியம் ரூ.750 கழித்து ரூ.1,899 கட்ட வேண்டும்.
இதுதவிர வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்யும் 15 விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி ரூ.485 விலையுள்ள 5 கிலோ உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு ரூ.122-க்கு வழங்கப்படவுள்ளது'.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story