தண்ணீர் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்


தண்ணீர் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 17 May 2022 9:45 PM IST (Updated: 17 May 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பி.ஏ.பி. பாசன விவசாயிகள் அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

பொள்ளாச்சி

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பி.ஏ.பி. பாசன விவசாயிகள் அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

விவசாயிகள் மனு

பொள்ளாச்சி அருகே ஆழியாறு பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, திருமூர்த்தி பாசன விவசாயிகள் சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.) திட்டத்தில் ஆழியாறு, பாலாறு படுகைகள் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு, பாலாறு ஆறுகள் மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

 பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 

ரத்து செய்ய வேண்டும்

அரசாணையில் ஏற்கனவே காவேரி ஆற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் இரு கூட்டுக்குடிநீர் திட்டங்களை ரத்து செய்து விட்டு, ஆழியாறு மூலம் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிகிறோம். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஆழியாற்றின் தண்ணீர் மூலம் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர். ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டிற்கு 2.44 டி.எம்.சி.யும், கேரளாவுக்கு 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். தினமும் வினாடிக்கு 50 கன அடி வீதம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. 

ஏற்கனவே பி.ஏ.பி. திட்டத்தில் நீர்பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுமுக தீர்வு

 இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், பழைய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் வித்யாசாகர், புதிய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story