கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் திடீர் மரணம்


கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் திடீர் மரணம்
x
தினத்தந்தி 17 May 2022 9:55 PM IST (Updated: 17 May 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

கொழுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.


பெங்களூரு:

சின்னத்திரை நடிகை சேத்தனா

  கன்னட சின்னத்திரை இளம் நடிகையாக வலம் வந்தவர் சேத்தனா ராஜ். இவருக்கு வயது 21. இவர், ‘கீதா’, ‘தோரேசானி’, ‘ஒலவின நில்தன’ ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா வீரேனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் இவர், பெங்களூரு நகரில் வசித்து வந்தார்.

  சேத்தனா ராஜ், உடல் பருமனாக காணப்பட்டதால் அவரிடம் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி தோழிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து சேத்தனா ராஜ் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

  ஆனாலும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கொழுப்பு அறுவை சிகிச்சை செய்ய சேத்தனா ராஜ் முடிவு செய்து உள்ளார். இந்த நிலையில் பெங்களூரு ராஜாஜிநகர் நவ்ரங் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொழுப்பு அறுவை சிகிச்சை செய்ய தனது நண்பர் ஒருவருடன் சேத்தனா ராஜ் சென்றார். மேலும் அறுவை சிகிச்சை செய்ய ரூ.1½ லட்சத்தை சேத்தனா ராஜ் கட்டணமாக செலுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மரணம்

  இந்த நிலையில் நேற்று அதிகாலை சேத்தனா ராஜிக்கு டாக்டர்கள் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது நுரையீரல் பகுதியில் சேத்தனா ராஜூக்கு தண்ணீர் தேங்கியதாக தெரிகிறது. இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார். மேலும் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சேத்தனா ராஜை பசவேஸ்வராநகரில் உள்ள இருதய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  ஆனாலும் அங்கு கொண்டு செல்வதற்குள் சேத்தனா ராஜ் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. சேத்தனா ராஜ் இறந்த தகவலை அவரது பெற்றோரிடம், டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். 

மேலும் சேத்தனா ராஜின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த நிலையில் தங்களிடம் அனுமதி பெறாமல் சேத்தனா ராஜிக்கு டாக்டர்கள் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்ததாகவும், டாக்டர்களின் அலட்சியத்தால் தான் சேத்தனா ராஜ் உயிரிழந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது சேத்தனா ராஜின் பெற்றோர் சுப்பிரமணியநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

உடல் அடக்கம்

  இந்த நிலையில் இருதய ஆஸ்பத்திரியின் டாக்டர் சந்தீப், பசவேஸ்வராநகரில் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறி இருந்ததாவது, எங்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் முன்பே சேத்தனா ராஜ் உயிரிழந்தது தனியார் ஆஸ்பத்திரிக்கு தெரியும். ஆனாலும் சேத்தனா ராஜிக்கு சிகிச்சை அளிக்கும்படி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் எங்களை மிரட்டினர். 

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து சேத்தனா ராஜின் உடல் எம்.எஸ்.ராமையா ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
  பிரேத பரிசோதனை செய்யப்பட்டதும் அவரது உடல் சொந்த ஊரான வீரேனபாளையாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு சேத்தனா ராஜின் உடலுக்கு பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் சேத்தனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சேத்தனா ராஜின் திடீர் மரணம் கன்னட திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐ.சி.யு. வசதி இல்லாததால் சேத்தனா இறந்தார்

கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து உயிரிழந்த நடிகை சேத்தனாவின் பெரியப்பா ராஜப்பா என்பவர் கூறும்போது, ‘எனது தம்பியின் மகளான சேத்தனா, கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். அவர் உடல் பருமனாக இருந்தார். 

உடல் பருமனாக இருந்தால் சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காது என்று யாரோ கூறியுள்ளனர். இதனால் அவர் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது உயிரிழந்து உள்ளார். அவர் அறுவை சிகிச்சை செய்த ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு. வசதி இல்லை. டாக்டரின் அலட்சியத்தால் தான் அவர் இறந்து விட்டார்’ என்றார்.

பெரிய ஆளாக வருவேன் என்று பாட்டியிடம் கூறிய சேத்தனா

உயிரிழந்த கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா கிராமத்தில் பிறந்தவர். கிராமத்தில் பிறந்தவர் என்றாலும் அவருக்கு சினிமாவில் நடிக்க அதிக ஆசை இருந்தது. ஆனால் இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் சேத்தனாவின் பாட்டி நமது குடும்பத்திற்கு சினிமா வேண்டாம், திருமணம் செய்து கொள் என்று கூறியுள்ளார். ஆனால் தனது பாட்டியிடம் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், திரைஉலகில் பெரிய ஆளாக வருவேன் என்றும் சேத்தனா கூறியுள்ளார். அதுபோல் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நிலையில் சேத்தனா இளம் வயதிலேயே உயிரிழந்து உள்ளார்.


Next Story