தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 May 2022 10:06 PM IST (Updated: 17 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

கோவை ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மஞ்சப்பை பயன்படுத்த ஒலிப்பெருக்கி மூலம் பிரசாரம் செய்தனர்.

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கோவை ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. 

இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சத்யபுனிதன், ராஜேந்திரன், சலேத் ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல வடவள்ளி பகுதிகளில் உள்ள கடைகளிலும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.12,600 அபராதம் விதிக்கப்பட்டு, 67 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு

இந்த நிலையில் பூமார்க்கெட் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாநகராட்சி ஆய்வாளர்கள், ஒலிப்பெருக்கி மூலமும் மஞ்சப்பையை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

 அப்போது மஞ்சப்பை கொண்டு வந்து பொருட்கள் வாங்குமாறும், பொதுமக்களும், வியாபாரிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்றும், இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

Next Story