கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜமாபந்தி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜமாபந்தி வருகிற 30-ந் தேதி தொடங்க இருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சங்கராபுரம் தாலுகா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 1431-ம் பசலிக்கான ஜமாபந்தி(வருவாய் தீர்வாயம்) வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஜூன்) 14-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெற உள்ளது. அதன்படி சங்கராபுரம் தாலுகாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஜூன்) 10-ந் தேதி வரையிலும், கள்ளக்குறிச்சி தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தலைமையில் அடுத்த மாதம் 6-ந் தேதி வரையிலும், சின்னசேலம் தாலுகாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் அடுத்த மாதம் 6-ந் தேதி வரையிலும் நடக்கிறது.
திருக்கோவிலூர் தாலுகா
அதேபோல் திருக்கோவிலூர் தாலுகாவில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜவேல் தலைமையில் அடுத்த மாதம் 3-ந் தேதி வரையிலும், கல்வராயன்மலை தாலுகாவில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் தலைமையில் அடுத்த மாதம் 2-ந் தேதி வரையிலும், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் தலைமையில் அடுத்த மாதம் 13-ந் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, சமூக இடைவெளியை பின்பற்றி தங்களது கோரிக்கை மனுக்களை குறிப்பிட்ட நாட்களில் தொடர்புடைய தாலுகா அலுவலகங்களில் சமர்ப்பித்து தீர்வுகண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story