அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 10:25 PM IST (Updated: 17 May 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லோகநாதன், ஞானசேகரன், ஏழுமலை மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரவி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணி நியமனம் பெற்ற அனைவரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.

 ஓய்வுப்பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வனத்துறை காவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். 

சட்டமன்ற தேர்தலின்போது அளித்த ஓய்வூதியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பான வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

Next Story