2 வயது குழந்தை எரித்துக்கொலை
கம்பம் அருகே குலை நடுங்க வைக்கும் வகையில், 2 வயது குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டது. வரதட்சணை கொடுக்காததால் மருமகளையும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
காதல் திருமணம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 60). இவர், திராட்சை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
அவருடைய மகன் அருண்பாண்டியன் (29). இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவப்பிரியா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாகித் (2) என்ற ஆண் குழந்தை இருந்தது. தனது பெற்றோருடன், அருண்பாண்டியன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.
பெரியகருப்பனுக்கும், சிவப்பிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது பெரியகருப்பன், தனது மகன் எந்தவித வரதட்சணையும் இன்றி சிவப்பிரியாவை திருமணம் செய்து விட்டதாக கூறி வந்தார்.
பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
இந்த நிலையில் நேற்று இரவு வரதட்சணை கேட்டு பெரியகருப்பன், சிவப்பிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த அருண்பாண்டியன் தந்தையையும், தனது மனைவியையும் சமாதானம் செய்தார்.
பின்னர் அவர், அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் மனைவிக்கு உணவு வாங்குவதற்கு சென்றார். அந்த நேரத்தில் பெரியகருப்பன், சிவப்பிரியாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பெரியகருப்பன் தோட்டத்தில் பூச்சி மருந்து எந்திரத்தை இயக்குவதற்கு, கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்தார். பின்னர் மருமகள் மீது பெட்ரோலை ஊற்றினார்.
இதுமட்டுமின்றி ஒன்றும் அறியாமல் அங்கு விளையாடி கொண்டிருந்த பேரன் யாகித் மீதும் அவர் பெட்ரோலை ஊற்றினார். மருமகள், பேரன் என்று பாராமல் நெஞ்சை கல்லாக்கி கொண்டு அவர்கள் மீது தீ வைத்து கொளுத்தினார்.
குழந்தை சாவு
கண்இமைக்கும் நேரத்தில் சிவப்பிரியா, குழந்தை யாகித் ஆகியோர் மீது தீப்பற்றி எரிந்தது. வேதனை தாங்க முடியாமல் 2 பேரும் அலறினர். இதனையடுத்து பெரியகருப்பன் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையே சிவப்பிரியா மற்றும் அவருடைய குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் மீது எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து அருண்பாண்டியன் பதறியடித்து கொண்டு ஓடி வந்தார்.
உடல் கருகி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவப்பிரியாவையும், குழந்தை யாகித்தையும் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி யாகித் பரிதாபமாக இறந்தது.
தொழிலாளி கைது
சிவப்பிரியா மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த பெரியகருப்பனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் மீது வழக்கு
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவப்பிரியா போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், காதல் திருமணம் செய்து கொண்ட தன்னிடம், வரதட்சணை கேட்டு மாமனார் பெரியகருப்பன், மாமியார் ஒச்சம்மாள், கணவர் அருண்பாண்டியன், அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் கொடுமைப்படுத்தினர் என்று கூறியுள்ளார். இதையடுத்து அருண்பாண்டியன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலை நடுங்க வைக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story