பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைமுறைகளை மாற்ற வேண்டும்: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்படாமல் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் பேட்டி
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைமுறைகளை மாற்ற வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்படாமல் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப்படாமல், பயனாளிகளுக்கு பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டு வழங்கியதில் ரூ.7 கோடி முறைகேடு நடந்ததாக 24 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. கலெக்டரால் பிறப்பிக்கப்பட்ட இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரியும், திட்ட இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகியோரை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பால்பிரான்சிஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
கண்டன கோஷங்கள்
சங்கத்தின் மாநில செயலாளர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் செல்வகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக 24 ஊழியர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் எந்தவித தவறும் செய்யவில்லை.
வங்கியில் பணம் வரவு
மத்திய அரசின் நிதி பங்களிப்போடு நடைபெறும் இந்த திட்டம் நகராட்சி, பேரூராட்சிகளில் சரியாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் ஊரக வளர்ச்சிதுறையில் சரியான நடைமுறை இல்லை. வீடு கட்ட முடியாத பயனாளிகளுக்கு 2, 3, 4-வது கட்ட பணத்தொகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இருந்து தான் அந்த பட்டியல் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் அலுவலர்கள் யாரும் கையூட்டு பெறவில்லை.
அந்த பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அரசின் நெருக்கடியாலும், ஆய்வுக்கூட்டத்தில் தப்பிப்பதற்காகவும் வீடு கட்டாத பயனாளிகளுக்கு உயர் அதிகாரிகள் பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு திட்டங்களை வகுக்க வேண்டும். இல்லையென்றால் இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் பணம் வீணடிக்கப்படும்.
மாநிலம் முழுவதும்...
இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்படாமல் வங்கியில் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. முறையான பயனாளிகளுக்கு வீடு கிடைக்க இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் அரசாங்க பணம் வீணடிக்கப்படும். ஊழியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். சென்னையில் நாளை துறை சார்ந்த அமைச்சரை சந்திக்க உள்ளோம். குறிப்பாணை நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story