பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவரிடம் வாக்குவாதம் செய்த பெண் துப்புரவு பணியாளர்
குளச்சலில் கை காட்டியும் நிற்காமல் சென்றதால் பஸ்சை இயக்க விடாமல் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த பெண் துப்புரவு பணியாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
குளச்சல்,
குளச்சலில் கை காட்டியும் நிற்காமல் சென்றதால் பஸ்சை இயக்க விடாமல் டிரைவரிடம் வாக்குவாதம் செய்த பெண் துப்புரவு பணியாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
துப்புரவு பணியாளர்
தக்கலை கண்ணாட்டுவிளையை சேர்ந்தவர் ஜெயராணி (வயது50). இவர் கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். குளச்சல் அருகே வெட்டுமடை பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை ஜெயராணி பிரித்து போடுவது வழக்கம். நேற்று காலையில் இவர் குப்பைகளை பிரித்து போட்டுவிட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்வதற்கு நவஜீவன் காலனி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து குளச்சல் நோக்கி ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை நிறுத்துமாறு ஜெயராணி கை காட்டினார். ஆனால் பஸ் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. சுமார் 500 மீட்டர் தூரத்தில் பஸ் சென்ற போது பஸ்சிற்குள் இருந்த ஒரு பெண் கைக்குழந்தையுடன் இறங்க வேண்டும் என்று சத்தமிட்டார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
ஏமாற்றம்
அப்போது ஜெயராணி தூரத்தில் நிற்கும் பஸ்சில் ஏற முயற்சித்து ஓடினார். அதற்குள் பஸ் புறப்பட்டு சென்று விட்டது.
இதனால், ஏமாற்றமடைந்த ஜெயராணி பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் ஏறி குளச்சல் பஸ் நிலையம் வந்தார். அப்போது நவஜீவன் காலனி நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பஸ்சை, டிரைவர் நாகர்கோவில் செல்ல திருப்பினார்.
இதனை கண்ட ஜெயராணி அந்த டிரைவரிடம் சென்று ‘நான் கை காட்டியும் பஸ்சை ஏன் நிறுத்தவில்லை' என கேட்டார். அதை பொருட்படுத்தாமல் டிரைவர் தொடர்ந்து பஸ்சை இயக்க முயன்றார்.
வாக்குவாதம்
இதனால் ஆத்திரமடைந்த ஜெயராணி பஸ்சின் முன்னால் நின்று அதை இயக்க விடாமல் வாக்குவாதம் செய்தார். இதனால், அந்த பஸ் புறப்பட்டு செல்ல முடியாமல் நின்றது. அத்துடன் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பஸ் நிலையத்தில் நின்ற பிற பஸ் டிரைவர்கள் அங்கு வந்து டிரைவருக்கு ஆதரவாக ஜெயராணியை சத்தமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் குளச்சல் பஸ் நிலையத்தில் சுமார் ½ மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story