வடகாடு பகுதியில் விற்பனைக்கு வந்து குவியும் பலாப்பழங்கள்
வடகாடு பகுதியில் விற்பனைக்கான பலாப்பழங்கள் குவிந்து வருகிறது.
வடகாடு:
பலாப்பழங்கள் ஏற்றுமதி
வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் பலாமரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். இப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் அதிக அளவில் சுவையுடையதாக இருப்பதால் உள்ளூர் கமிஷன் கடைகளில் வியாபாரிகள் மூலமாக ஏலம் மற்றும் எடை கணக்கில் வியாபாரிகள் மூலம் வாங்கப்படுகிறது.
மேலும் அவைகள் ஆலங்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி உள்ளிட்ட வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தைகளுக்கும், பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாக, திருவாரூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்குடி, திருச்சி, குளித்தலை, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் மும்பை, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமின்றி குவைத், சவுதி, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது.
டன் கணக்கில் குவிகிறது
தமிழகத்திலேயே ருசி மிகுந்த பலாப்பழங்கள் இப்பகுதிகளில் தான் விளைகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா பொதுமுடக்கத்தால் பலாப்பழங்களை விற்பனை செய்ய முடிய வில்லை. பலாமரங்களிலேயே பழுத்து வீணாகி வந்தது. இந்த ஆண்டுதான் பலாப்பழங்கள் ஓரளவு விற்பனை ஆகி வரும் நிலையில், பெரும்பாலான விவசாயிகள் தங்களது பலாமரங்களை ஒத்தி மற்றும் குத்தகை முறையில் குறைந்த விலைக்கு கொடுத்து விட்டு தவித்து வருகின்றனர்.
இதில் பலாப்பழ வியாபாரிகள் தான் அதிக லாபம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதிகளில் அதிக அளவில் பழாப்பழங்கள் விளைந்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் எந்தவித மதிப்பு கூட்டுதல் முறையோ மற்றும் குளிர் பதன கிட்டங்கி உள்ளிட்ட வசதிகளும் இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் தற்போது சிறிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.50 மற்றும் ரூ.100 -க்கும், பெரிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை ஆகி வருகிறது.
மேலும் மாம்பழ சீசன் தொடங்கும் போது பலாப்பழம் உற்பத்தி குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு இப்பகுதிகளில் அதிக அளவில் பலாப்பழம் உற்பத்தி உள்ளதால் தினமும் டன் கணக்கில் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story