சிவகங்கையில் லாரி தீப்பிடித்து எரிந்து கோதுமை மூடைகள் சேதம்


சிவகங்கையில் லாரி தீப்பிடித்து எரிந்து கோதுமை மூடைகள் சேதம்
x
தினத்தந்தி 17 May 2022 11:33 PM IST (Updated: 17 May 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் கோதுமை மூடைகள் சேதம் அடைந்தன.

சிவகங்கை,
சிவகங்கையில் லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் கோதுமை மூடைகள் சேதம் அடைந்தன.
லாரியில் திடீர் தீ
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் சுந்தர். இவருக்கு சொந்தமான லாரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பொருட்களை கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
நேற்று முன்தினம் காரைக்குடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து 409 மூடை கோதுமையை ஏற்றிக்கொண்டு சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு வந்துள்ளது.  இரவு வந்த லாரியில் இருந்து மூடைகள் இறக்க வேண்டி இருந்ததால் கிடங்கின் உள் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று லாரியின் முன் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
கோதுமை மூடைகள் சேதம்
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் லாரியின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்ததுடன் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கோதுமை மூடைகள் சேதம் அடைந்தன.
லாரி தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story