கீழப்பனையூர், ராயவரம் அம்மன் கோவில்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


கீழப்பனையூர், ராயவரம் அம்மன் கோவில்களில் தேரோட்டம்  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 17 May 2022 11:41 PM IST (Updated: 17 May 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

கீழப்பனையூர், ராயவரம் அம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அரிமளம்:
காமாட்சியம்மன் கோவில் 
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கீழப்பனையூர் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி கடந்த 6-ந்் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 8-ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினம்தோறும் மண்டகப்படி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், காவடி, பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
தேரோட்டம் 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். முக்கிய வீதிகளில் பக்தர்கள் நின்று அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
முத்துமாரியம்மன் கோவில்
அரிமளம் அருகே ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி கடந்த 2-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. ராயவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்கள் மலர்களை கொண்டு வந்து அம்மன் முன் கொட்டி வழிபட்டனர். 9-ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் மண்டகப்படி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
அசைந்தாடி வந்த தேர்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதையடுத்து முத்துமாரியம்மன் தங்க அங்கியுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதிகளிலும் பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். 
பின்னர் தேர் கோவில் நிைலயை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story