ஏரிக்கரை பகுதியில் கட்டிய வீடுகளை கலெக்டர் ஆய்வு


ஏரிக்கரை பகுதியில் கட்டிய வீடுகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 May 2022 11:49 PM IST (Updated: 17 May 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா ஏரிக்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்த கலெக்டர், அவர்களுக்கு வேறு இடம் வழங்கியதும் வீடுகளை அகற்ற உத்தரவிட்டார்.

அணைக்கட்டு

பள்ளிகொண்டா ஏரிக்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வுசெய்த கலெக்டர், அவர்களுக்கு வேறு இடம் வழங்கியதும் வீடுகளை அகற்ற உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்ட பேரூராட்சி 11-வது வார்டில் ஏரிகரையை ஒட்டி சுமார் 70 வீடுகள் கட்டி வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அவர்கள் ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாகவும், அதை இடிக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். திடீரென மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அந்தப் பகுதிக்கு சென்று அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளையும், அந்தப்பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களிடம் இது சம்பந்தமாக குறைகளை கேட்டறிந்தார்.

வேறு இடம் வழங்கியதும்

அப்போது ஏரியியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டவில்லை, ஏரிக்கரையோரம் தான் வீடுகள் கட்டி வசித்துவருகிறோம். எங்கள் வீடுகளை அகற்றக்கூடாது அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வருவாய்த்துறை அதிகாரிகளிகளிடம் இவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து வீடுகள் கட்டிய பிறகு, ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். 

பின்னர் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தை பார்வையிட்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தை அவர்களிடம் தடையில்லா சான்று பெற்று பேரூராட்சி சார்பில் பாலம்கட்டித்தர கேட்டுக்கொண்டார். 

ஆய்வின் போது பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ராம்குமார், அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள்  உடனிருந்தனர்.

Next Story