பரமத்திவேலூரில் சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


பரமத்திவேலூரில் சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 17 May 2022 11:51 PM IST (Updated: 17 May 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பரமத்திவேலூர்:
சாக்கடை கால்வாய் பணி
பரமத்திவேலூர் பேரூராட்சிக்குட்பட்ட அன்புநகர், கைகோளர் தெரு, குப்புச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி மந்தமாக நடப்பதாகவும், கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 
மேலும் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை பலகையை வைத்து கடப்பதாகவும், இதனால் குழந்தைகள், பெண்கள், முதிவர்கள் தவறி விழும் சூழல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குழிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
சாலைமறியல்
இந்தநிலையில் சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று வெட்டுக்காட்டுப்புதூர் அருகே நாமக்கல் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் டேங்கர் லாரி ஒன்றை சாலையில் நிறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சாக்கடை கால்வாய் பணி விரைந்து முடிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story