வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரிப்பு


வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 May 2022 11:51 PM IST (Updated: 17 May 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையின் எதிரொலியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது.

கிருஷ்ணகிரி:
தொடர் மழை 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பகலில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அணையின் அருகே உள்ள மலையில் காட்டாறு வெள்ளம் ஏற்பட்டு அணையில் கலந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. வெள்ளம் குறைந்த பிறகே அவ்வழியே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. மலையில் இருந்து வந்த தண்ணீரில் மீன்கள் அடித்து வரப்பட்டது. இதனால் நேற்று அப்பகுதி இளைஞர்கள் மீன்களை பிடித்தனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை 
கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 2-ந் தேதி நீர்வரத்து 12 கனஅடியாக இருந்த நிலையில் தொடர் மழையால், நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பொதுவாக அணையின் நீர்மட்டம் 48 அடியை எட்டினால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம்.
தொடர் மழை எதிரொலியால் ேக.ஆர்.பி. அணை 50 அடியை எட்டியதாலும், அணைக்கு தொடர்ந்து நீர் வருவதாலும் அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு 
இதேபோல ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போதைய நீர் இருப்பு 40.84 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 985 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 640 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சூளகிரி- 65 மி.மீட்டர், போச்சம்பள்ளி- 36.2, பெனுகொண்டாபுரம்-32.40, பாரூர்-19.2, ஓசூர்-19, தளி-15, தேன்கனிக்கோட்டை-12, நெடுங்கல்-11.4, ராயக்கோட்டை-11, அஞ்செட்டி-.4, ஊத்தங்கரை- 5 மில்லி மீட்டர் மழை என மாவட்டம் முழுவதும் மொத்தம் 314.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Next Story