பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பாதயாத்திரை
வாணியம்பாடி அருகே பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பாதயாத்திரை நடந்தது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள பாலாறு தொடங்கும் பகுதியில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் பாலாறு மக்கள் இயக்கம் சார்பில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பாதயாத்திரை, ரதயாத்திரை நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வரை தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை தொடக்க விழா தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பாலாற்று தடுப்பணையில் உள்ள கனகநாச்சியம்மன் கோவிலில் பாலாறு அன்னைக்கு சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.
மகாதேவ மலை சித்தர் பாதயாத்திரை, ரதயாத்திரையை தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு சன்னியாசிகள் மற்றும் சித்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ராமநாயக்கன் பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஆர்.வாசு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பாத யாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை மற்றும் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளை சாமி கோரஷனந்த சரஸ்வதி மற்றும் பாலாறு பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கர், பாலாறு மக்கள் இயக்கம் ஆர்.எஸ்.ஜவகர் பாபு, ரா.தண்டபாணி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story