காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்


காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 12:09 AM IST (Updated: 18 May 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

காரைக்குடி
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
வைகாசி திருவிழா
காரைக்குடியில் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்ற கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.
கொரோனா பரவல் குறைந்ததையொட்டி இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 10-ந்தேதி மாலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு அம்மன் வெள்ளி சிம்ம வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், கைலாச வாகனம், வெள்ளி ரதம், வெள்ளி ரிஷிப வாகனம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8.13 மணிக்கு கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேர் முன்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4 மணி முதல் காரைக்குடி நகர் முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் மதுக்குடம் எடுத்து வந்து தேரை சுற்றி வந்து தரிசனம் செய்தனர். அதன் பின்னர் இரவு 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பட்டாசுகள் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தொடங்கினர். 
தேர் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு அருகில் உள்ள காட்டம்மன் கோவிலுக்கு சென்றது. அங்கு அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்று இரவு முழுவதும் அங்கேயே தேர் நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று (புதன்கிழமை) காலை அங்கிருந்து புறப்பட்டு கொப்புடையம்மன் கோவிலுக்கு வந்தடைதல் நிகழ்ச்சி நடக்கிறது. 
நேற்று நடந்த தேரோட்ட விழாவில் காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தெப்பத்திருவிழா
10-வது நாளான நாளை (19-ந்தேதி) யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் காலை பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் கணபதிமுருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story