சுற்றுலா பயணிகளை கவரும் ராமநாதபுரம் மாவட்ட சிறப்புகள்
இன்று சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் ராமநாதபுரம் மாவட்ட சிறப்புகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தினை விளக்கும் விதமாக, ஆண்டு தோறும் மே மாதம் 18-ந்தேதி அன்று சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை 1977 முதல் சர்வதேச அருங்காட்சியக சங்கம் நடத்துகிறது. 2022-ம் ஆண்டிற்கான கருப்பொருள் அருங்காட்சியகங்களின் சக்தி என்பதாகும்.
அருங்காட்சியகம்
பண்பாடு, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல், கலைப்பொருட்கள், சிற்பவியல், தாவரவியல், விலங்கியல், நாணயவியல் போன்ற பல துறை சார்ந்தவற்றை சேகரித்து, பாதுகாத்து, மக்களுடைய பார்வைக்காக அருங்காட்சியகங்கள் காட்சிப்படுத்துகின்றன. பல துறை சார்ந்தவை ஒரே இடத்தில் இருப்பதால் கல்வி, ஆராய்ச்சிக்கு இவை உதவுகின்றன. அந்த வகையில் ஒரு மாவட்டமே அருங்காட்சியகமாக விளங்கும் சிறப்பை ராமநாதபுரம் மாவட்டம் கொண்டுள்ளது.
ராமநாதபுரம் அரண்மனை
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:-
ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை, திரு உத்தரகோசமங்கை, திருவாடானை ஆகிய இடங்களில் ஓவியக்கலையை ரசிக்கலாம். மிகப் பெரிய பிரகாரம் கொண்ட ராமேசுவரம், திருப்புல்லாணி, திருவாடானை கோவில்களில் கட்டிடக்கலை, சிற்பக்கலையை அறிந்துகொள்ளலாம். ராமநாதபுரம் அரண்மனையில் நூற்றாண்டுகளை கடந்தும் அழியாமல் உள்ள மூலிகைகளால் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் இப்போதும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்துகிறது.
அழகன்குளம், தேரிருவேலி, தொண்டி, பெரியபட்டினம் அகழாய்வுகள் வணிகம், வெளிநாட்டவர் தொடர்பு, பண்பாடு, எழுத்தறிவு, நாணயவியலை அறிய உதவுகின்றன. ரோமானியர், அரேபியர், சீனர், போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள் போன்ற வெளிநாட்டவர்கள் வணிகத்திற்காக வருகை புரிந்த வரலாறு இந்த மாவட்டத்துக்கு உண்டு.
பறவைகள் சரணாலயம்
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 15 பறவைகள் சரணாலயங்களில், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேலச்செல்வனூர் கீழச்செல்வனூர், சக்கரக்கோட்டை, தேர்த்தங்கல் ஆகிய 5 சரணாலயங்கள் ராமநாதபுரத்தில் உள்ளன. இதில் மேலச்செல்வனூர் கீழச்செல்வனூர் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் ஆகும். வறண்ட பகுதிகளாக அறியப்படும் முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு அதிகளவு வரும் அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் மூலம் அவற்றின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது.
நீர் மேலாண்மை
வறண்ட மாவட்டம் என சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டின் 2-வது மற்றும் 3-வது மிகப்பெரிய கண்மாய்களான ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ராமநாதபுரம் பெரிய கண்மாய்கள், சங்கிலித் தொடர் போன்ற கண்மாய்கள் இங்கு உள்ளன. பாண்டியர், சேதுபதி மன்னர்கள் காலத்திய நீர்ப்பாசனமுறை, நீர் மேலாண்மையை இவற்றின் மூலம் அறியலாம்.
மன்னர்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நீர் மேலாண்மையினால் அதிக அளவில் பாரம்பரிய நெல் விளைச்சல் இருந்துள்ளது. கடலில் அமைந்த இந்தியாவின் ஒரே உயிர்க்கோளப் பூங்காவான, மன்னார் வளைகுடா உயிர்க்கோள தேசிய பூங்காவின் பெரும்பகுதி இம்மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் காரங்காடு, பிச்சைமூப்பன்வலசை, குருசடைத்தீவு ஆகிய சூழல் சுற்றுலா இடங்களில் மாவட்டத்தின் அழகைக் காணலாம். கரகாட்டம், ஒயிலாட்டம், நாடகம், நடனம் ஆகிய கலைகளை வளர்க்கும் கலைஞர்கள் இங்கு அதிகமாக உள்ளனர்.
சகிப்பு தன்மை
திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொடை கொடுத்த கல்வெட்டும், தீர்த்தாண்டதானம் கோவிலுக்கு இஸ்லாமிய அஞ்சுவண்ணத்தார் கொடை கொடுத்த தகவல் சொல்லும் கல்வெட்டும் அக்கால மக்களின் சகிப்புத்தன்மைக்கு ஆதாரமாகும். உலகின் மிகப்பெரியதும் அதிக வாழ்நாளைக் கொண்டதுமான பொந்தன்புளி மரங்கள் இந்த மாவட்டத்தில் பல ஊர்களில் வளர்ந்து வருகின்றன. அதேபோல் ஆதண்டை உள்ளிட்ட பல அரியவகை மூலிகைத் தாவரங்களும் பனைமரங்களும் மாவட்டம் முழுவதும் காணப்படுகின்றன. பனைப் பொருட்கள், சங்கு பொருட்கள் கொண்டு கலைப்பொருட்கள் செய்யப்படுகின்றன. அனைத்து ஊர்களிலும் பரவலாக மான்களும், சில ஊர்களில் உடும்பும் காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். இப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்புகள், சிறந்த ஸ்தலங்கள் உள்ளன. அவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.
Related Tags :
Next Story